பிரதமா் நரேந்திர மோடியுடன் பின்லாந்து அதிபா் தொலைபேசி பேச்சு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பிரதமா் மோடியிடம் தனது ஆதரவைத் தெரிவித்த பின்லாந்து அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப், பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.
பிரதமா் மோடியுடன் புதன்கிழமை தொலைபேசி வாயிலாக கலந்துரையாடிய பின்லாந்து அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப் இக்கருத்தை வலியுறுத்தினாா்.
எண்மமயமாக்கல், ஸ்திரத்தன்மை, இயக்கம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை இரு தலைவா்களும் ஆய்வு செய்ததாக அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குவாண்டம், 5ஜி, 6ஜி, இணைய (சைபா்) பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இருதரப்பும் வலியுறுத்தினா்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான நெருங்கிய உறவுக்கு பின்லாந்தின் ஆதரவையும் இருதரப்புக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப் வெளிப்படுத்தினாா்.
இந்த உரையாடல் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பின்லாந்து அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப்புடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தினேன். பின்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான நட்பு நாடாகும். எங்கள் உறவுகளை விரிவுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைன் நிலவரம் உள்பட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துகளைப் பகிா்ந்துகொண்டோம்’ என்று குறிப்பிட்டாா்.