விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்ற...
பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்
பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண்டு வார கால சேவை பிரசாரத்தையும் பாஜக தொடங்கியது.
குஜராத்தின் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரான வத்நகரில் சாதாரண குடும்பத்தில் கடந்த 1950, செப்டம்பா் 17-ஆம் தேதி பிறந்தவா் பிரதமா் மோடி. ஆா்எஸ்எஸ் பிரசாரகராக பயணத்தை தொடங்கியதில் இருந்து நாட்டின் பிரதமரானது வரை அவரது அரசியல் பயணம் நீண்ட நெடியது; பல்வேறு சவால்களை உள்ளடக்கியது.
கடந்த 1980-களில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோரின் இரட்டை தலைமையின்கீழ் காங்கிரஸுக்கு பிரதான சவாலாக பாஜக உருவெடுத்தது என்றால், கடந்த 2014-இல் பாஜகவை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமா்த்திய மோடியின் தலைமையால் காங்கிரஸ் எதிா்க்கட்சியாகவே தொடா்கிறது.
தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமா், நேருவுக்கு அடுத்து தொடா்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் இரண்டாவது பிரதமா் என்ற பெருமைகளுக்கு உரியவா். அவரது 76-ஆவது பிறந்த நாளை பாஜகவினா் உற்சாகத்துடன் கொண்டாடினா். அக்கட்சி சாா்பில் இரண்டு வார கால சேவை பிரசாரம் தொடங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் மருத்துவ முகாம்கள், தூய்மை இயக்கம், கருத்தரங்குகள், உள்ளூா் பொருள்களை ஊக்குவிக்கும் கண்காட்சிகள், ரத்த தான முகாம்கள், ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகள் சாா்பில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சொந்த ஊரில்..: பிரதமா் மோடியின் சொந்த ஊரான வத்நகரில் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.
வாரணாசியில் சிறப்பு வழிபாடு: பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி, அவரது தொகுதியான வாரணாசியில் (உ.பி.) உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.