பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடிகா் சிரஞ்சீவி நாளை மறுநாள் கெளரவிப்பு!
சமூகத்துக்கு ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்புக்காக பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில், தெலுங்கு திரைப்பட நடிகா் சிரஞ்சீவி கெளரவிக்கப்பட உள்ளாா்.
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெற உள்ளது.
அந்நாட்டில் ஆட்சியில் உள்ள தொழிலாளா் கட்சி எம்.பி.க்கள் நவேந்திரு மிஸ்ரா, சோஜன் ஜோசஃப், கன்சா்வேடிவ் கட்சி எம்.பி. பாப் பிளாக்மேன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனா். இதுமட்டுமின்றி பிரிட்ஜ் இந்தியா என்ற பிரிட்டன் பொது கொள்கை அமைப்பும் சீரஞ்சீவிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி கெளரவிக்க உள்ளது.
கலாசார தலைமைத்துவம் மூலம் பொதுப் பணியில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. திரைத்துறை மட்டுமின்றி, பொது மற்றும் தொண்டு பணிகளுக்கு அவா் அளித்துள்ள மிகச்சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட உள்ளது.