செய்திகள் :

தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், திமுக | களம் பகுதி 5

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation - `தொகுதி மறுவரையறை’ விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

எழுத்து : எஸ்.செந்தில்குமார், முன்னாள் எம்.பி (தி.மு.க)

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

மத்திய பா.ஜ.க அரசின் நயவஞ்சகம் நிறைந்த செயல் திட்டங்களில் ஒன்றுதான், ‘தொகுதி மறுவரையறை’. வட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்… அதே வேளையில், தென் மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, அரசியல் ரீதியில் தென்னகத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இதற்கு எதிராகத்தான் பிற மாநிலங்களை அணிதிரட்டும் வேலையில் தி.மு.க இறங்கியிருக்கிறது.

சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்பைப் பார்த்துவிட்டு, ‘தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறையாது’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், தொகுதி மறுவரையறையால், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொகுதிகள் கணிசமாக அதிகரிக்கப்போவது பற்றி அவர் வாய்திறக்கவில்லை.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ டு ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’

மக்கள்தொகை அடிப்படையில்தான், சட்டமன்ற, நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான வழிகாட்டல்களை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் சிறப்பாகக் கடைப்பிடித்தன. ஆரம்பத்தில், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்று தொடங்கி, பிறகு ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்று தீவிர பிரசாரம் நடைபெற்றது. இப்படியாக, அரசின் மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, அந்த மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்திருக்கிறது. அதனால், அந்த மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், மக்கள்தொகை கட்டுப்பாடுத் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியதற்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்டனை தரப்போகிறார்களா என்ற கேள்வி இன்று எழுந்திருக்கிறது.

அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மத்திய பா.ஜ.க அரசிடமிருந்து தென் மாநிலங்கள் முரண்படுகின்றன. இந்த சூழலில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க-வால் வளர முடியவில்லை. இந்த மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இத்தகைய சூழலில்தான், தொகுதி மறுவரையறையைக் கொண்டு ஒரு சூழ்ச்சி வலையை பா.ஜ.க பின்னுகிறது. அந்தப் பின்னணியிலிருந்துதான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகளை அதிகரித்தார்கள். தற்போது, மொத்தம் 543 மக்களவை உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அங்கு 1,033 இருக்கைகளை அமைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய சூழ்ச்சியும், ஆபத்தும் அதன்பின்னால் இருக்கிறது.

தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எம்.பி-க்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கும், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு எவ்வளவு அதிகரிக்கும் என்பதனை முன்கூட்டியே கணித்து வைத்துக்கொண்டுதான், நாடாளுமன்றத்தில் எம்.பி-க்களுக்கான இருக்கைகளை அதிகரித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கப்ட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழகத்துக்கு பத்து தொகுதிகள் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். இதனால், நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழந்துவிடுவோம். இது ஏதோ தொகுதிகளின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டும் அல்ல. இது, நமது மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை.

நாடாளுமன்றம்!

எச்சரிக்கை மணி

இந்த ஆபத்தை உணர்ந்துதான், ‘தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென் இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கிறது’ என்று எச்சரிக்கை மணியை ஒலித்தார் தமிழக முதல்வர். எனவேதான், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்தும், மாநில உரிமையைக் காப்பது குறித்தும் விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தமிழக முதல்வர் கடந்த மார்ச் 5-ம் தேதி கூட்டினார்.

அதில், மக்கள்தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று 2000-ம் ஆண்டு அன்றைய பிரதமர் உறுதியளித்தார். அதுபோல, இந்த வரையறை 2026-லிருந்து அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான தாக்குதல்

தொகுதி மறுவரையறை பிரச்னை, ஒட்டுமொத்த தென் இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. இது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிடைத்துவரும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான தாக்குதல் என்பதால், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், முதல்வர் ஸ்டாலின், 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் மார்ச் 7-ம் தேதி கடிதமாக எழுதியுள்ளார்.

நாடாளுமன்றம்

அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதற்கான ஆலோசனையும் இருக்கிறது.

தேசத்துக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளில் பா.ஜ.க எந்தளவுக்கு சூழ்ச்சியுடன் இறங்கும் என்பதை நன்கு அறிந்திருப்பதால்தான், இந்த விவகாரத்தில் இவ்வளவு தீவிரமாக தமிழக முதல்வர் களமிறங்கியிருக்கிறார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370-ஐ பா.ஜ.க அரசு எப்படி நீக்கியது என்பதை அனைவரும் பார்த்தோம். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்காமல் அதிரடியாக அதை நீக்கினார்கள்.

அதேபோல, மூன்று வேளாண் சட்டங்களையும் அப்படித்தான் கொண்டுவந்தார்கள். அப்போது நான் மக்களவை உறுப்பினராக இருந்தேன். பா.ஜ.க அரசு எப்படியெல்லாம் சதிவேலைகளில் ஈடுபடும் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆகவே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அப்படி எதுவும் நடைபெற்றுவிடக்கூடாது என்பதுதான் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது.

செந்தில் குமார், முன்னாள் எம்.பி

ஒன்றிய அரசால் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. கல்வித்திட்டத்துக்கான நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசு சொல்வதை நாம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த நிலையில், ஒன்றிய அரசின் அநீதிகளுக்கு எதிராக தமிழக எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் தீவிரமாகக் குரல் கொடுத்துவருகிறார்கள். இப்படியான சூழலில்தான், தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டுமேன்று சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.

அவர்களின் திட்டம் நிறைவேறினால், தமிழ்நாட்டை கண்டுகொள்ளவே மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சித் திட்டமும் வராது. மொத்தத்தில், கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குறியாகிவிடும். எனவேதான், இந்த விவகாரத்தை தி.மு.க மிகவும் சீரியஸாகப் பார்க்கிறது. இதில் எங்களுடைய போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வாய்ப்பே இல்லை என்று ஒன்றிய அரசும், பா.ஜ.க தலைவர்களும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், விவசாயிகள் போராட்டத்துக்கு அடிபணித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்தது ஒன்றிய பா.ஜ.க அரசு.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நிச்சயம் அதுதான் நடக்கும்!

(களம்: தொகுதி மறுவரையறை... முற்றும்)

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Canada: கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள்; யார் இவர்கள்?

கனடாவின் புதிய பிரதமர்கார்னியின்அமைச்சரவையில் அனிதா ஆனந்த் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான (Innovation) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கமலா கேரா சுகாதாரத்துறை அமைச்சராக இட... மேலும் பார்க்க

America: வெனிசுலா மக்களைச் சிறையிலடைத்த அமெரிக்கா; "கடைசியாக போனில் பேசும்போது.." - ஒரு தாயின் அழுகை

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், ... மேலும் பார்க்க

Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Aurangzeb: "பட்னாவிஸ் ஒளரங்கசீப்பைப் போல..." - காங். தலைவர் பேச்சு; மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை

மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற க... மேலும் பார்க்க

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினரின் பொருளாத... மேலும் பார்க்க

``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 - 2021) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று கோடி ரூபாய் வரை சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது... மேலும் பார்க்க