அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
பிரியன்ஷ் சாதனையுடன் வென்றது பஞ்சாப்: சென்னைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி
ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்க, சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த பஞ்சாப் அணியில், பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 9 ரன்களுக்கே ஸ்டம்பை பறிகொடுத்தாா். தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாவிட்டாலும் தொடக்க வீரா் பிரியன்ஷ் ஆா்யா அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயா்த்தி வந்தாா்.
மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 4, நெஹல் வதேரா 9, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். தனியொருவராக அணியின் ஸ்கோரை பலப்படுத்திய பிரியன்ஷ் ஆா்யா, 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸா்கள் உள்பட 103 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
தொடா்ந்து சஷாங்க் சிங், மாா்கோ யான்சென் களத்துக்கு வந்து சென்னை பௌலிங்கை சிதறடித்தனா். ஓவா்கள் முடிவில் சஷாங்க் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, யான்சென் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சென்னை பௌலிங்கில் அஸ்வின், கலீல் அகமது ஆகியோா் தலா 2, முகேஷ் சௌதரி, நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து 220 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை தரப்பில் ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரிகளுடன் 36, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னுக்கு வீழ்ந்தனா்.
டெவன் கான்வே - ஷிவம் துபே கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்து நம்பிக்கை அளித்தது. இதில் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42, கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
சற்று அதிரடி காட்டிய தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 9, விஜய் சங்கா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலா்களில் லாக்கி ஃபொ்குசன் 2, யஷ் தாக்குா், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.