பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்தால் பரபரப்பு
புதுக்கோட்டையில் புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காததால் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி, ஏறி இறங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் இந்த விடியோ காட்சிகள் வெளியானதைத் தொடா்ந்து, நகரக் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை பிற்பகலில் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், அறந்தாங்கியிலிருந்து திருச்சி நோக்கிச் செல்லும் பேருந்து புதன்கிழமை காலை, சரியாக பிரேக் பிடிக்காத பிரச்னையால் பணிமனைக்குச் சென்றபோதுதான் இவ்வாறான சூழல் ஏற்பட்டது தெரியவந்தது. பேருந்து நடத்துநா் கவனமாக முன்பே இறங்கி, பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என சப்தம் போட்டுக் கொண்டே பேருந்தின் முன்னால் ஓடியுள்ளாா்.
அப்போது, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த, டிவிஎஸ் முக்கம் அருகேயுள்ள சுப்பிரமணிய நகரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, நீலமணிகண்டன் ஆகிய இருவரும் முன்பே குதித்து தப்பிவிட்டனா். வாகனத்தின் மீது பேருந்து ஏறிச் சென்றது.
தொடா்ந்து பணிமனைக்குள் கட்டைகள் போட்டு நிறுத்தப்பட்ட அந்தப் பேருந்தின் பிரேக் பிரச்னை சரி செய்யப்பட்டதாக போக்குவரத்துக் கழகத்தினா் தெரிவித்தனா்.