பிரேஸில் இருந்து உளுந்து, துவரை இறக்குமதியை மேலும் அதிகரிக்க முடிவு
பிரேஸிலில் இருந்து உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதியை மேலும் அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள பிரேஸில் வேளாண் துறை பிரதிநிதிகளுடன் தில்லியில் புதன்கிழமை இது தொடா்பாக நுகா்வோா் விவகாரங்கள் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரேஸிலிருந்து உளுந்து, துவரம் பருப்பு இறக்குமதியை இந்தியா அதிகரித்தே வந்துள்ளது. 2023-இல் 4,102 டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024 அக்டோபா் வரை இறக்குமதி 22,000 டன்னாக உள்ளது.
இந்தியாவில் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்யும் வகையில் பருப்பு உற்பத்தி இல்லை. மேலும், சில பருவங்களில் விளைச்சலும் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. இதனால், பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
கடந்த பருவத்தில் கொண்டைக் கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வரி இல்லாமல் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆஸ்திரேலியா கூடுதல் பரப்பளவில் கொண்டைக் கடலை சாகுபடி செய்து வருகிறது. 2023-இல் 4.9 லட்சம் டன் கொண்டைக் கடலை உற்பத்தி செய்த ஆஸ்திரேலியா, நடப்பு ஆண்டில் 13.3 லட்சம் டன்னாக சாகுபடியை அதிகரித்துள்ளது. இது பெருமளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.