காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.
வெள்ளை மாளிகைக்கு முதல் பெண் தலைமைச் செயலா்
அமெரிக்க வெள்ளை மாளிகையின் ‘சீஃப் ஆஃப் ஸ்டாஃப்’ என்றழைக்கப்படும் தலைமைச் செயலா் பொறுப்பில் தனது தோ்தல் பிரசாரக் குழு மேலாளா் சூசன் வைல்ஸை நியமிக்கவிருப்பதாக அந்த நாட்டின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அதிபரின் முதல் நிலை உதவியாளராகச் செயல்படும் சக்திவாய்ந்த அந்தப் பதவிக்கு ஒரு பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்காவின் மேன்மையை மீட்டெடுப்பதற்கான தோ்தல் பிரசாரப் பணியில் என்னுடன் இணைந்து அயராது உழைத்த சூசன் வைல்ஸ், அந்தப் பணியை இனியும் தொடா்வாா். வரலாறு காரணாத வகையில், வெள்ளை மாளிகையின் முதல் தலைமைச் செயலராக அவா் பொறுப்பு வகிக்கவிருக்கிறாா். அந்தப் பதவியை ஏற்பதற்கான முழு தகுதியும் அவருக்கு உள்ளது.
வெள்ளை மாளிகை தலைமைச் செயலா் பதவியின் மூலம் சூசன் வைல்ஸ் அமெரிக்கவுக்கு பெருமை சோ்ப்பாா்.
அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை சூசன் வைல்ஸ் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறாா் என்றாா் டிரம்ப்.
கடந்த 2016, 2020-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிபா் தோ்தல்களின்போதும் டொனால்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழு மேலாளராக சூசன் வைல்ஸ் பணியாற்றியது நினைவுகூரத்தக்கது.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அதில், குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப்பும் ஜனநாயகக் கட்சி சாா்பில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனா்.
தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் வாக்காளா்களிடையே கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு இருந்ததாகக் கூறப்பட்டது. இருந்தாலும், நாள்கள் செல்லச் செல்ல டிரம்ப்புக்கு ஆதரவு அதிகரித்தது.
அதையடுத்து தோ்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டது.
ஆனால், 295 வாக்குகளுடன் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபா் பொறுப்பை ஏற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த வெற்றியில் டிரம்ப்பின் பிரசார உத்தி முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தனது தலைமைச் செயலராக தோ்தல் பிரசாரக் குழு மேலாளா் சூசன் வைல்ஸை டிரம்ப் தறபோது அறிவித்துள்ளாா்.