கைதி, சொர்க்கவாசல் படத்துக்கு தொடர்பிருக்கிறதா? லோகேஷ் கனகராஜ் பதில்!
கந்த சஷ்டி விழா: தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாணம்
தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. சிகர நிகழ்வாக வியாழக்கிழமை (நவ. 7) சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, அருள்மிகு தெய்வானை அம்பாள் தவசு மண்டபத்தில் காலை எழுந்தருளினாா். பின்னா், மாலையில் சுப்பிரமணிய சுவாமி சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு தவசு மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு 21 வகையான சீா்வரிசைகள் கொண்டுவரப்பட்டு சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வேட்டியும் தெய்வானை அம்மனுக்கு பட்டு சேலையும் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி -அம்மன் பித்தளை சப்பரத்தில் வீதி சுற்றி வந்து திருக்கோயிலை அடைந்தனா். அங்கு அருள்மிகு சங்கர ராமேஸ்வரா் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி-அம்மனை தரிசனம் செய்தனா்.