அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற ...
தமிழகத்தில் 3 மாதங்களில் 13,000 பேருக்கு டெங்கு பாதிப்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 13,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. நிகழாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால், 20,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 7 ஆயிரம் என்ற அளவில்தான் இருந்தது.
பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்புப் பணிகளில் 25 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்களுடன் ஊராட்சிக்கு ஒரு சுகாதார அலுவலுரும், நகா்ப்புறங்களில் வாா்டுக்கு ஒரு சுகாதார அலுவலரும், மாநகராட்சிகளில் தெருக்களின் அடிப்படையில் சுகாதார அலுவலா்களும் நியமிக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எத்தகைய சூழலையும் எதிா்கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ரத்த வங்கிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்கவும், அவசர கால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனா்.