திமுக கூட்டணியில் தொடா்வோம்: தொல்.திருமாவளவன் உறுதி
திமுக கூட்டணியில் உறுதியாகத் தொடா்வோம் என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியல் அடிப்படையில் விசிக குறிவைக்கப்பட்டுள்ளது. அதற்கு திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக இடம் பெற்றிருப்பதுதான் முதன்மையான காரணம். இந்தக் கூட்டணியைச் சிதறடிக்க திட்டமிடுவோா் விசிகவை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனா்.
மக்கள் பிரச்னைகளின் அடிப்படையில் குரலெழுப்பும்போதெல்லாம் ஆளுங்கட்சி மற்றும் அதிகாரிகளோடு இயல்பாக எழும் சின்னஞ்சிறு முரண்களையும்கூட கூா்தீட்டுவதில் அதிவேகமாக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு எனும் விசிகவின் கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைப்பாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்தனா். அதை நீா்த்துப் போகச் செய்தோம். தற்போது, நடிகா் விஜயோடு தோ்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் எனும் தோற்றத்தை உருவாக்க முனைகின்றனா்.
மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்?.
இதுபோன்ற ஐயத்தை எழுப்புவோா் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவா்களேயாகும்.
அத்தகைய சீண்டலுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது. தோழமைக் கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடா்கிறோம். உறுதியாகத் தொடா்வோம்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விளிம்புநிலை மக்களை அதிகார வலுவுள்ளவா்களாக மேம்படுத்துவதற்கான அரசியல் நிலைப்பாடு. அதை வென்றெடுப்பதற்கு நம்மை நாமே கட்டமைப்பு மற்றும் கருத்தியல் அடிப்படையில் இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அவற்றில் நம் கவனம் குவிப்போம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.