பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட புயல்கள்! பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!
மணிலா: பிலிப்பின்ஸ் கடந்த ஒரு மாத காலத்தில் 6 புயல்களால் மிகப்பெரியளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு கடந்த 4 வார காலத்தில் 6 புயல்கள் கரையைக் கடந்துள்ளன.
இந்த நிலையில் கடைசியாக, பிலிப்பின்ஸின் கிழக்கே அமைந்துள்ள கேட்டெண்டுவானெஸ் தீவில் 'மேன்-இ (பெப்பிடோ)’ புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்துள்ளது. அப்போது, மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று தொடர்ந்து வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸை கடந்த ஒரு மாத காலத்தில் தாக்கிய புயல்களில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக மேன் -இ புயல் கரையைக் கடந்தபோது அதன் தாக்கம் இருந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
மேன் -இ புயலா வீசிய சூறைக்காற்று கனமழையால், நுவே விஸ்காயா மாகாணத்தில் அம்பாகியோ நகரில் திங்கள்கிழமை ஏற்பட நிலச்சரிவில் வீடு ஒன்று தரைமட்டமானது. அதில் வீட்டிலிருந்த குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்ணில் புதைந்த பலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாத பிற்பகுதியில், பிலிப்பின்ஸில் ‘ட்ராமி’ புயல் தாக்கியதில், ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய அளவுக்கு மழைப்பொழிவு, வெறும் 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு நகரங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வீசிய சூறைக்காற்று, மற்றும் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது.
அடுத்தடுத்த புயல்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள பிலிப்பின்ஸில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 7 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறைக்காற்றின் பாதிப்பால் சுமார் 8000 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. பல இடங்களில் தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிலிப்பின்ஸுக்கு கூடுதலாக 1 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமெரிக்க படைகளும் ஈடுபடும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.