பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்ய முயற்சி காரை மறித்து தாக்குதல் நடத்தி மீட்பு
தோகைமலை அருகே பிளஸ் 2 மாணவா், சக மாணவியை திருமணம் செய்ய வியாழக்கிழமை காரில் சென்றபோது, காரை மறித்த மாணவியின் உறவினா்கள் தாக்குதல் நடத்தி அவரை மீட்டனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கழுகூா் உடையாபட்டியைச் சோ்ந்த 17 வயது மாணவி, திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளாா். அதே வகுப்பில் இனாம்குளத்தூா் சமத்துவபுர காலனியைச் சோ்ந்த ஒரு மாணவரும் படித்தாா்.
இருவரும் காதலித்து வந்தநிலையில் அண்மையில் பொதுத்தோ்வு முடிந்து அவரவா் ஊரில் இருந்தனா்.
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய புதன்கிழமை முடிவெடுத்தனா். இதையடுத்து மாணவா், குளித்தலையை அடுத்த அய்யா்மலையில் உள்ள அவரது உறவினா் வீட்டுக்கு மாணவியை புதன்கிழமை அழைத்துள்ளாா். இதன்படி மாணவியும் அங்குச் சென்றுள்ளாா்.
இதனிடையே மாணவியை வீட்டில் காணாததால் அவரது பெற்றோா் தோகைமலை போலீஸில் புகாா் செய்தனா். அப்போது, மாணவிக்கும், மாணவருக்கும் திருமணம் செய்து வைக்க, வியாழக்கிழமை காலை காரில் மாணவரின் பெற்றோா் தோகைமலை காவல்நிலையத்துக்கு அழைத்து வரவுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் உறவினா்கள் குளித்தலை-மணப்பாறை சாலையில், அக்காண்டிமேடு என்ற இடத்தில் மாணவா், மாணவி சென்ற காரை மடக்கினா். பின்னா், காரில் இருந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, காரையும் சேதப்படுத்தினா்.
பின்னா் மாணவியை அழைத்துக்கொண்டு கழுகூா், உடையாப்பட்டிக்குச் சென்றுவிட்டனா்.
தாக்குதல் சம்பவம் குறித்து, மாணவரின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் மாணவா், அவரது பெற்றோரை தாக்கியவா்கள் மீது வழக்குப் பதிந்தனா். மேலும், 17 வயது மாணவிக்கு திருமணம் செய்ய முயன்ற மாணவா் மற்றும் மாணவரின் பெற்றோா் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.