பிஸ்மில்லா, பிஸ்மில்லா... பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!
பெஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறிக்கொண்டே முஸ்லிம் இளைஞர்களும் இந்தப் பகுதி மக்களும் காப்பாற்றியதாகத் தாக்குதலில் கணவனைப் பறிகொடுத்த ஒரு பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த சூழலில் அவர்கள் தனது சகோதரர்களாகவே தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர்.
அப்போது ஆயுதங்களுடன் இந்தப் பகுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்ட நிலையில், 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் கர்நாடகத்தின் ஷிவமோகாவைச் சேர்ந்த மஞ்சுநாத் ராய் என்பவர் அவரது மனைவி பல்லவி மற்றும் மகனின் கண் முன்னே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள பல்லவி, தங்களையும் கொலை செய்யக் கோரி பயங்கரவாதிகளிடம் நானும் எனது மகனும் கோரினோம். ஆனால், அவர்கள் உங்களைக் கொல்ல மாட்டேன், மோடியிடம் போய் இதைச் சொல் என்று அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகள் குறித்து பேசிய பல்லவி, சம்பவத்தின்போது அந்த இடத்தில் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும் தாக்குதல் நடந்தபோது, இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினரும் ராணுவமும் வருவதற்கு முன்னதாகவே அப்பகுதி மக்கள் வந்து உதவினர். வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத காரணத்தால், அவர்களின் குதிரைகளை சம்பவ இடத்துக்கு கொண்டுவந்தனர்.
மூன்று இளைஞர்கள் பிஸ்மில்லா, பிஸ்மில்லா என்று கூறியபடியே எங்களைக் காப்பாற்றினார்கள். அவர்கள் அந்த சூழலில் எனது சகோதரர்களைப் போன்றே தெரிந்தார்கள்.
பின்னர் சம்பவ இடத்துக்கு ராணுவ அதிகாரிகள் வந்த பிறகு, மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் உதவியை கோரினர்” என்று பல்லவி தெரிவித்துள்ளார்.