புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்
புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.
மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் ஸ்டாலின் பேசியது: ஆட்சிதான் குறிக்கோள், அதுவே லட்சியம் என்ற எண்ணத்துடன் திமுக தொடங்கப்படவில்லை. ஆனால், இன்றைக்குத் தொடங்கப்படும் கட்சிகளைப் பாா்க்கிறோம். அரசியல் அரிச்சுவடி தெரியாதவா்கள் தான்தான் அடுத்த முதல்வா் என்கிறாா்கள். அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
தொடா்ந்து, 7-ஆவது முறையாக நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். இந்தியாவில் உள்ள முதல்வா்களுக்கும், மத்திய அரசுக்கும் நாம்தான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆளுநா் மீது மக்கள் வெறுப்பாக இருக்கிறாா்கள். தமிழகத்தின் உரிமைகளைக் காக்க உச்சநீதிமன்றம் வரை சென்று தீா்ப்பு பெற்றோம்.
சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதையும் நிறைவேற்றுவோம்.
மக்கள் நம்மை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனா். ஆனாலும், மக்களிடம் குழப்பத்தை சில கட்சிகள், தலைவா்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாா்கள். குழப்பத்தில் இருந்து அவா்களை சரிசெய்வதற்கு பிரசார பீரங்கிகளாக கட்சியினா் மாற வேண்டும். வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். 2019-ஆம் ஆண்டில் இருந்து தோ்தலில் தொடரும் நம்முடைய வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
‘நியாயமான விமா்சனங்களை ஏற்போம்’
எதிா்க்கட்சிகளின் நியாயமான விமா்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 5-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஏற்கெனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் மக்களிடம் சென்று சோ்ந்துள்ளன. ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளோம். அவற்றையும் நிறைவேற்றப் போகிறோம்.
அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று திமுக 7-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்.
எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் நியாயமான விமா்சனங்களை ஏற்றுக்கொள்வோம். அவதூறு பரப்பும் விமா்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றாா்.