உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!
பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்களின் முக்கியமான வர்த்தகப் பகுதியாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் மொத்தமாக வாங்கும் இடமாக இது அறியப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடி செலவில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. இதில் 540 கடைகள், இரு சக்கர வாகன நிறுத்த வசதி, குளிர் சாதன சேமிப்பு, 50 டன் அளவுக்கு காய்கறி மற்றும் பழங்களை சேமிக்கக்கூடிய வசதியுடன் நவீன அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தை முழுமையாக செயல்படத் தொடங்கினால் அரசுக்கு வருடத்திற்கு ரூ.10.80 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திறந்து வைத்தாலும், இதுவரை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். முன்னாள் வணிகர்கள், “எங்களுக்கு மீண்டும் கடைகள் வழங்க வேண்டும், அதற்குரிய கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறோம்” எனக் கூறி, மாநகராட்சிக்கு மனுவும் அளித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “புதிய மார்க்கெட்டில் வணிகர்களுக்கு கடைகளை ஒதுக்க தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்தக் கடைகள் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவடைந்தவுடன் உடனடியாக கடைகள் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

மக்களும் வியாபாரிகளும், வழக்கு விரைவில் முடிவடைந்து, மார்க்கெட் திறக்கப்பட்டு வணிகம் பழைய நிலையை அடைய வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.