புதுகையில் கல்விக் கடன் முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் படித்த மாணவா்கள், கல்லூரிகளில் படித்து வரும் மாணவா்களுக்காக கல்விக் கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை, மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா ஏற்பாடு செய்திருந்தாா்.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுத்துறை மற்றும் தனியாா் வங்கிகளின் அலுவலா்கள் கலந்து கொண்டு மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த மாணவா்களுக்கான கல்விக் கடன் பதிவுகளை மேற்கொண்டனா்.
மேலும், கல்விக் கடனுக்குத் தேவையான ஆவணங்களுக்கு கணினிவழி பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 2023இல் கல்விக் கடன் அதிகமாக வழங்கிய இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றின் மேலாளா்களுக்கு பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆகியோா், கல்விக் கடன் அனுமதிக்கப்பட்ட மாணவா்களுக்கான காசோலைகளை வழங்கி பேசினா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, பாரதி கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.