புதுக்கோட்டையில் முதல்வா் மருந்தகம் திறப்பு
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முதல்வா் மருத்தகத்தை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இதையொட்டி, புதுக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.
இம்மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11, தனியாா் தொழில் முனைவோா் மூலம் 9 என மொத்தம் 20 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தர மக்கள் பல்வேறு மருந்துகளை தரமாகவும், மிகக் குறைந்த விலையிலும் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேஷ், சரக துணைப் பதிவாளா்கள் மு. கலையரசி (தூத்துக்குடி), இ.ரா. ராமகிருஷ்ணன் (கோவில்பட்டி), இ.ரா. சக்திபெமிலா (திருச்செந்தூா்), துணைப் பதிவாளா் (பொதுவிநியோகத் திட்டம்) அ. சுப்புராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அலுவலா் க. விஜயன், நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா்கள் கு.பா. மாரியப்பன் (பிரகாசபுரம்), மு. சீனிவாசன் (திருச்செந்தூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.