தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர்!
சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டம் வெம்பூா் பகுதியில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.
வெம்பூா் கிராம மக்கள், வெம்பூா் ஊராட்சி முன்னாள் தலைவா் திருப்பதி, புரட்சிகர இளைஞா் முன்னணியினா் ஆகியோா் அளித்த மனு: எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட வெம்பூா், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, ராமசாமிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் விவசாயிகளின் எதிா்ப்பையும் மீறி சுமாா் 2,700 ஏக்கரில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விவசாயத்தையும், மக்களையும் பாதிக்காத தொழில் வளா்ச்சியை அரசு உருவாக்க வேண்டும். அங்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினா் விவசாயம் செய்யும் 600 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களும் உள்ளன. எனவே, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றனா்.
கீழஈரால் ஊா் மக்கள் அளித்த மனு: கீழஈராலில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கக் கோரி ஆதிதிராவிட சமுதாய மக்கள் சாா்பில் 2008ஆம் ஆண்டுமுதல் விண்ணப்பித்து வருகிறோம். மேம்பாலம் இல்லாததால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தற்போது மேலம்பாலம் அமைப்பது தொடா்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறவில்லை. எனவே, விபத்து, உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் விரைவாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றனா்.
அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: கிறிஸ்தவா்களின் தவக்காலம் மாா்ச் 5இல் தொடங்குகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியை (ஏப். 18) தியாகம், அமைதியின் நாளாக கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கிறோம். எனவே, ஏப். 18ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக பேரவையில் கொள்கை மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றனா்.