FAMILY படம்: ``சீரியல்ல துணை நடிகையா இருக்கிற எனக்கு இந்த அங்கீகாரம் ரொம்பவே பெர...
புதுச்சேரியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை... பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதுச்சேரியில் 2 நாள்களுக்கு கனமழை..
தெற்கு வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் புதுச்சேரியில் 52 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால், நகரம் மற்றும் கிராமப்புறங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போது, மீண்டும் இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால், பொதுமக்களை தயாராக இருக்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன்.
ஆட்சியர் அறிவுறுத்தல்
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், அதனால், புதுச்சேரியில் 13.12.2024 வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, இன்று காலை முதல் (11.12.2024) மழை தொடர்ந்து பெய்தவண்ணம் உள்ளது. இந்த மாத துவக்கத்தில் புதுச்சேரியை பெரிதாக சேதப்படுத்தி ஸ்தம்பிக்க வைத்த ஃபெஞ்சல் புயல் மற்றும் அதனை தொடர்ந்து உண்டான வெள்ளப்பெருக்கில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தினை நினைவில் வைத்துக் கொண்டு, அனைத்து பொதுமக்களும் செயல்பட வேண்டும். பொதுமக்கள், தங்கள் வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்கள். மற்றும் அத்தியாவசிய மருந்துகளை தேவைக்கேற்ப வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவசரகால பேட்டரி விளக்குகளை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக, மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகளையும் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் உடல் முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களிலோ அல்லது நிவாரண முகாம்களிலோ இருந்திட வேண்டும்.
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் அருகாமையில் உள்ள தாய்சேய் நல மையத்தினை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனையின்படி நடந்து கொள்ள வேண்டும். ஃபெஞ்சல் புயலின்போது மீட்கப்பட்ட முதியோர் மற்றும் குடும்பத்தினர், வெள்ளம் வரும்வரை காத்திருக்காமல் அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் சென்று தங்க வேண்டும். அதன் மூலம் மாவட்ட நிர்வாகம் வேறு ஆயத்தப்பணிகளில் கவனம் செலுத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கெட்டுப்போன மற்றும் எளிதில் செரிக்காத உணவுகளை தவிர்க்க வேண்டும். தரையில் இருக்கும் மின் சாதனங்களின் மின் இணைப்பினை துண்டித்து வைக்க வேண்டும். மின் கம்பங்கள், மின்மாற்றி (transformer) தூண்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது.
கழிவு நீர் அடைப்புப் பற்றி உடனடியாக உள்ளாட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் குளிப்பது, விளையாடுவது, மீன் பிடிப்பது என எந்த காரணம் கொண்டும் அருகில் செல்ல வேண்டாம். மேலும், மிக அவசியமான தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் உலா வரும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம். வானிலை அறிக்கை மற்றும் மாவட்ட நிர்வாகம் அளிக்கும் அதிகாரபூர்வ செய்திகள் மற்றும் எச்சரிக்கைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். புயல் தொடர்பான புகார்களுக்கு இலவச உதவி எண்களான 112, 1077 மற்றும் வாட்ஸ்-அப் எண்ணான 9488981070 ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்.