AUS-W vs IND-W: சொதப்பிய இந்திய மகளிர் அணி... ஆஸியிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா!
Vaikom : "பெரியாருக்கு புகழ் மாலை; கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன்" - மு.க.ஸ்டாலின் உரை
பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்.
அந்நிகழ்வில் பேசிய ஸ்டாலின், "தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் எடுத்த ஊரில் இன்றைக்கு புகழ் மாலை சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் வெற்றி. திராவிட இயக்கத்தின் வெற்றி. சமூக நீதியையும், வரலாற்றையும் இந்நாள் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். வைக்கம் நிகழ்ச்சியைக் காண கருணாநிதி இல்லாததை எண்ணி வருந்துகிறேன். இந்திய அளவில் ஆளுமை மிகுந்த தலைவராக பினராயி விஜயன் திகழ்கிறார். எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி சமூகத்தை விழுப்புடன் வெற்றி பெற வைத்தவர் பெரியார். பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரைப் பற்றி சொல்லும்போது குறிப்பிட்டதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.
ஒருவர் புறப்பட்டு ஓயாமல் உழைத்து, உள்ளத்தை திறந்து பேசி... எதற்கும் அஞ்சாமல் பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச் செய்ததில் வெற்றி பெற்ற வரலாறு வேறு எங்கும் இருந்ததில்லை என்று சொன்னார். அண்ணா சொன்னதைப்போல இது நம் வெற்றியின் சின்னம். வைக்கத்தில் இருந்த தீண்டாமைகளுக்கு எதிராக கடைசி வரை பெரியார் போராடினார்.
நாட்டில் சமூக நீதிக்கானத் தொடக்க புள்ளியாக இந்த வைக்கம் இருந்தது. வைக்கம் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. இனி நாம் அடையவிருக்கும் வெற்றிகளுக்கு அடையாளமாக வைக்கம் இருக்கும். வைக்கம் போரில் வெற்றி பெற்ற பெரியாரை வைக்கம் வீரர் என்று திரு.வி.க போற்றினார்.
தீண்டாமையை ஒழிக்க திருவிதாங்கூரில் எடுத்த முயற்சி முக்கியமானது. சமூக மாற்றமே முதன்மையானது என பெரியார் போராடினார் என அம்பேத்கர் பாராட்டினார். வைக்கம் போராட்ட நினைவு அஞ்சல் தலையை விரைவில் வெளியிடவுள்ளோம். கேரளாவிற்கு வரும் அனைவரும் வைக்கம் நினைவகத்திற்கு வர வேண்டும். சட்டம் தேவைதான். அதைவிட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம். யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிரான நம் போராட்டத்தைத் தொடர வேண்டும். முன்பு இருந்ததைவிட வேகமாக செயல்பட வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.