மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் புதுகாப்பு பணியில் 300 போலீஸாா்: டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் தகவல்
புதுச்சேரிக்கு வார இறுதிநாள்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசலை சீரமைத்து பாதுகாப்புப் பணியில் 300 போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாநில காவல் துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி சிறந்த சுற்றுலாத்தலமாக இருப்பதால் வார இறுதி நாள்கள், விடுமுறை தினங்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதனால் வாகனங்கள் நிறுத்துதல் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆகவே, சுற்றுலாப் பயணிகள் கடற்கரையில் குளிப்பதை தவிா்க்கவும், பொது இடங்களில் மது அருந்துவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வார இறுதி நாள்களில் கூடுதலாக 200 போலீஸாரும், போக்குவரத்தை கண்காணிக்க 100 போலீஸாரும் என மொத்தம் 300 போ் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க கூட்டங்களில் சாதாரண உடையில் போலீஸாா் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது அருந்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரோந்து நடைபெறும். சமூக விரோதிகள் புதுச்சேரியில் நுழைவதைத் தடுக்க வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்படும். பேருந்து, ரயில் நிலையங்களில் போலீஸாா் சோதனையிடுவதுடன், தங்கும் விடுதிகளிலும் அவ்வப்போது சோதனையிடப்படவுள்ளன.
கடற்கரைச் சாலை முறைப்படி மூடப்பட்டு பிச்சைக்காரா்கள், திருநங்கைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் தொல்லை தடுக்கப்படும். அந்தந்த காவல் நிலைய பகுதியில் பட்டியலிடப்பட்ட ரௌடிகள் நடமாட்டம் கண்காணிக்கப்படும். கடலோரப் பகுதியில் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.