திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண...
புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?
காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய பேராசிரியர் மாதவைய்யா தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக சீனியர் மாணவிக்கு அனுப்பிய ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `அக்கா அஞ்சாறு மாசமா நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கேன்.
என்னால படிப்புல கவனம் செலுத்த முடியல. ஹெச்.ஓ.டி சார் என்னை ரொம்ப பாலியல் ரீதியில துன்புறுத்தராறு. ரொம்ப அசிங்கமா, அருவருப்பா பேசுறாரு. நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு’ என்று மாணவி கதறிய அந்த ஆடியோ பெற்றோர்களை பதற வைத்தது.

தொடர்ந்து, `பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் ஆடியோ வெளியிட, மகளிர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தன.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தை ஆட்டம் காண வைத்த அந்த ஆடியோவின் பின்னணி குறித்து கடந்த 05.10.2025 தேதியிட்ட ஜூ.வி இதழில், `படுத்தால்தான் டிகிரி வாங்க முடியுமா… படித்து வாங்க முடியாதா…? கதறும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள்’ என்ற தலைப்பில், புகாருக்குள்ளான பேராசிரியர் மாதவைய்யாவின் புகைப்படத்துடன் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தை, போராட்டக்களமாக மாற்றினார்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
`மாணவிகள் கூறும் பாலியல் குற்றச்சாட்டுள் மீது நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கக் கூடாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா உள்ளிட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
பல்கலைக்கழக மானியக் குழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி கடந்த 09.10.2025 அன்று இரவு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்களை லத்தியால் கொடூரமாக தாக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து, `ஷு’ கால்களாலும் எட்டி உதைத்தனர் போலீஸார். தொடர்ந்து 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

அதனால் பல்கலைக்கழக வளாகம் பதற்றத்திற்குள்ளாகியிருக்கிறது. அதையடுத்து மாணவர்கள் கைதுக்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் காரணம் இல்லை என்று நழுவிய புதுச்சேரி பல்கலைக்கழகம், பாலியல் புகார் பேராசிரியர் குறித்து வாய் திறக்கவில்லை.
மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், `பாலியல் குற்றச்சாட்டு பேராசிரியர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்களா… அல்லது நாங்களே எடுக்கட்டுமா…’ என்று முதல்வர் அலுவலத்தில் இருந்து பல்கலை நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அத்துடன் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட புகார் குழுவும் (District Complaint committee), பேராசிரியர் மாதவைய்யா மீதான புகாரை விசாரணைக்கு எடுத்தது.
இதற்கிடையில் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யுடம் அறிக்கை கேட்ட மத்திய உள்துறை அமைச்சகம், பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் கடுகடுத்திருக்கிறது. `பல்கலைக்கழகத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா… யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் ? இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று உடனே அறிக்கை அனுப்பி வையுங்கள்’ என்று டோஸ் விட்டிருக்கிறது.
தொடர்ந்து உள்துறை அமைச்சகம் ஆளுநர் கைலாஷ்நாதனிடமும் விளக்கம் கேட்க, அவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ் பாவுவிடம் பேசியிருக்கிறார்.

அதன்பிறகே இரவோடு இரவாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யாவை காரைக்கால் கிளைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, பேராசிரியர் தரணிக்கரசுவை நியமித்தது பல்கலை நிர்வாகம்.
அதேசமயம், `மாதவைய்யா கிளைத் தலைவர் பொறுப்பில் இருந்துதான் நீக்கப்பட்டிருக்கிறாரே தவிர, பேராசிரியராகவும், விடுதி வார்டனாகவும் தொடர்கிறார். அதனால் இது நிர்வாகத்தின் கண்துடைப்பு நாடகம். அதனால் மாதவைய்யா மட்டுமல்ல. அவரைப் போன்று குற்றச்சாட்டுகளுக்குள்ளான அனைத்து பேராசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை’ என்கின்றனர் மாணவர்கள்.