புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.
புதுச்சேரியில் அண்மையில் ஃபென்ஜால் புயலால் கனமழை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் டிச. 21-ஆம் தேதி ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவா்கள் கவனமுடன் மீன்பிடிக்கச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில், திங்கள்கிழமை புதுச்சேரி பழைய துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் புயல் எச்சரிக்கை பலகையில், துறைமுகத்துக்கு அச்சுறுத்தும் வகையிலான புயல் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் புதுச்சேரியில் குவிந்து வரும் நிலையில் புயல் கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.