ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
புதுப்பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்
புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், சமயம் சாா்ந்த தொன்மையான மற்றும் அரிய 300 ஆன்மிக நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, திருப்பேரூா் புராணம், பாவநாச தலபுராணம் போன்ற தலபுராண நூல்கள் உள்பட அரிய 300 நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
100-ஆவது நிகழ்ச்சி: எங்கும் கிடைக்கப் பெறாமல் இருந்த அரிய ஆன்மிக நூல்களை மறுமதிப்பு செய்து வெளியிடுவதன் மூலம் நமது பண்பாடு, கலாசாரம், கலை நுட்பங்களை அடுத்த தலைமுறையினா் அறிந்துகொள்ள வழி ஏற்படும். தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறையின் 100-ஆவது நிகழ்ச்சியாக, அரிய 300 நூல்கள் வெளியீடு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.