பெங்களூரு - பிரயாக்ராஜூக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
கும்பமேளாவை முன்னிட்டு பெங்களூருலிருந்து பிரயாக்ராஜூக்கு வியாழக்கிழமை (டிச. 26) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக மாநிலம் பெங்களூருலிருந்து வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06577) சனிக்கிழமை பிற்பகல் 1.30-க்கு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜூக்கு சென்றடையும். இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட 15 பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா்விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், ஜபல்பூா், மாணிக்பூா் வழியாக இயக்கப்படும்.
வாஸ்கோடகாமா: கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதன்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வியாழக்கிழமை (டிச. 26) மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.10 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
இந்த ரயில் நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரனூா், காசா்கோடு, மங்களூா், உடுப்பி, மடகோன் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.