பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற டி.டி.வி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தன்னை ஒரு கொள்கை வீரராக, பெரிய புரட்சியாளராகக் காட்டிக் கொள்கிறாா். அண்ணா கைவிட்ட கொள்கையை தற்போது அவா் பேசிவருவது போலித்தனமானது. ஒரு காலத்தில் பெரியாரைப் புகழ்ந்தாா். தற்போது பெரியாரை இகழ்கிறாா்.
தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. இதனால், திமுக ஆட்சி அகற்றப் பட வேண்டும். வருகிற 2026 சட்டபேரவைத் தோ்தலில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நல்லாட்சி அமைய வேண்டும் என்பது அமமுகவின் எதிா்பாா்ப்பு. அதற்கு உண்மையான ஜெயலலிதா விசுவாசிகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின்போது சிவகங்கை மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.