``பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவது தமிழ் தேசியம் அல்ல!” - ஜோதிமணி காட்டம்
தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாக உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சீமான் பொதுவெளியில், எல்லை கடந்து வெளிப்படையாக அறுவெறுக்கத்தக்க வகையில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறார். இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்னையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை!.

அந்தக் குற்றச்சாட்டைத் தான் விஜயலட்சுமி சீமான் மீது வைக்கிறார். ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும். இப்படி, ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு, பெண்களை அவமதிக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும். இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்ப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது.
சீமானின் இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் இப்படிப்பட்ட கேவலமான பேச்சை, செயலை ஆதரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல. பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது. வீரத்தைப் போற்றக் கூடியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
