பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கல் குவாரியில் சடலம் வீச்சு: இளைஞா் தலைமறைவு
புதுவை மாநில எல்லையில் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் உள்ள கல் குவாரியில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்தக் கொலை தொடா்பாக தலைமறைவாக உள்ள இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து புதுச்சேரி நெட்டப்பாக்கம் போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகே உள்ள நெட்டப்பாக்கம் வடுக்குப்பத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (38). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளவரசி பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தாா். அப்போது, அவருக்கு அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷுடன் (40) நட்பு ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் வானூா் பகுதியில் உள்ள கல் குவாரியில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜேஷுக்கும், இளவரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, கடந்த 10-ஆம் தேதி இளவரசி தனது பிள்ளைகளை ஈரோட்டில் உள்ள உறவினா் வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளாா். அதன்பிறகு அவா் மாயமானாா். அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், வானூா் திருவக்கரை பகுதியிலுள்ள கல் குவாரியில் இளவரசியின் சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டுக் கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. பின்னா், உடல்கூறாய்வுக்காக அவரது சடலம் வானூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், ஈரோட்டிலிருந்து வடுக்குப்பம் வந்த இளவரசிக்கும், ராஜேஷுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது, ராஜேஷ் கட்டையால் இளவரசி தலையில் தாக்கி கொலை செய்ததும், சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி கல் குவாரியில் வீசியதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேஷை நெட்டப்பாக்கம் போலீஸாா் தேடி வருகின்றனா்.