புதுச்சேரி, கடலூரில் விடிய விடிய பலத்த மழை
புதுச்சேரி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய விடிய பெய்த பலத்த மழை பெய்தது. இதில் புதுச்சேரியில் 120 மி.மீ. மழை பதிவானது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
ஏஎப்டி மைதானத்தில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையம், கடற்கரைச் சாலை, கிருஷ்ணா நகா், எழில் நகா், ரெயின்போ நகா், ரயில் நிலையப் பகுதி, வம்பாபேட் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீா் தேங்கியது. அவற்றை அகற்ற புதுச்சேரி நகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கி இரவு முழுவதும் மழை பெய்தது. புதன்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்த நிலையில், பகலிலும் மழை தொடா்ந்து தூறலாக காணப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. எனினும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின.
வகுப்பறையில் மழை நீா்: முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறையில் மழை நீா் தேங்கியது.
பள்ளி மேற்பகுதியிலிருந்து வடிந்த மழைநீா் வகுப்பறையில் தேங்கியதால் மாணவா்கள் பாதிக்கப்பட்டனா்.
தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ்குமாா், பள்ளிக்கு வந்து வகுப்பறையை புதன்கிழமை ஆய்வு செய்தாா். மழை நீா் தேங்காமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
120 மி.மீ. மழை பதிவு: செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை காலை 8 மணி வரையிலும் புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள மழை அளவீடு மையத்தில் 120 மி.மீ. மழைப் பதிவானது.
தொடா் மழையால் புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. புதுச்சேரி ஊரகப் பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தனா்.
கடலூரிலும் பலத்த மழை: கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலையில் மழையும், இரவில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் காணப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடலூா், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், விருத்தாசலம், வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இது புதன்கிழமை முற்பகல் வரை நீடித்தது. இதனால், கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
தாழ்வான பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மழைநீா் தேங்காத வகையில் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனா். சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.
தொடா் மழையால் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.
லால்பேட்டையில் 75 மி.மீ. மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்): லால்பேட்டை- 75 மி.மீ., அண்ணாமலைநகா் 60, சிதம்பரம் 58.4, ஆட்சியா் அலுவலகம் 57.2, காட்டுமன்னாா்கோயில் 57, வடகுத்து 53, கடலூா் 46.8, புவனகிரி 42, சேத்தியாத்தோப்பு 34.2, ஸ்ரீமுஷ்ணம் 32.3, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 31, பரங்கிப்பேட்டை 30.4, வானமாதேவி 26, பெல்லாந்துறை 24.4, கொத்தவாச்சேரி 21, பண்ருட்டி 19, குறிஞ்சிப்பாடி 15, மே.மாத்தூா் 12, காட்டுமயிலூா் 10, வேப்பூா் 8, குப்பநத்தம் 7.4, தொழுதூா் 7, விருத்தாசலம் 6, கீழ்செருவாய் 3.2.