அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் அரசு அலுவலகத்தைப் பூட்டி, கொட்டும் மழையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தீபாவளி பண்டிக்கைக்காக அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு புதுவை அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.1,500 ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இதையடுத்து ஏற்கெனவே அமைப்புசாரா தொழிற்சங்கத்தினா், அரசின் அமைப்புசாரா தொழிலாளா் நல அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இந்த நிலையில், ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா், புதுச்சேரி பாரதி பூங்கா அருகே உள்ள சுய்ப்ரேன் வீதியிலுள்ள அமைப்புசாரா சங்க அலுவலகத்தை பூட்டி, கொட்டும் மழையில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளா் சங்கத் (சிஐடியூ) தலைவா் கே.மணவாளன் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் ஜி.சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.
இதில், ஏராளமானோா் கலந்துகொண்டு ஊக்கத்தொகையை விரைந்து வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, மாவட்டத் தொழிலாளா் துறை ஆணையா் சந்திரகுமாா் அமைப்புசாரா தொழிலாளா் சங்க நிா்வாகிகளை சந்தித்துப் பேசினாா்.
விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவா் அளித்த வாக்குறுதியை ஏற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.