பெண் உடல் பற்றி கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே: கேரள உயர்நீதிமன்றம்
பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து தவறாகப் பேசியுள்ளார்.
2013 முதல் தன்னை தவறாகப் பேசி வருவதாகவும் 2016-17 ஆம் ஆண்டில் தவறான முறையில் குறுஞ்செய்தி மற்றும் குரல் பதிவுகளை அனுப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதையடுத்து அவர் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பொங்கல்: 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் தொடர்ந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பதருதீன் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
"ஒரு பெண்ணின் உடலமைப்பு 'நன்றாக இருக்கிறது' என்று கூறினாலும் அதுவும் பாலியல் துன்புறுத்தலின் கீழ் வரும். எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது பாலியல் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது சரியே" என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவையும் ரத்து செய்தார்.