காவல்நிலைய விசாரணையில் சிறுவன் பலி: 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை
பெண் ஊழியர்களை செல்போனில் ஆபாச படம் எடுத்த சக ஊழியர் கைது
மதுரை மாவட்டம் பரவையை அடுத்த சமயநல்லூரில் உள்ள மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்ததாக மின் வாரிய சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமயநல்லூர் மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில் 24 வயது பெண், இளநிலை கணக்கராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றுள்ளார்.
அப்போது, அதே அலுவலகத்தில் வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரியும் ராஜராஜேஸ்வரன், கழிப்பறையின் ஜன்னல் வழியாக தன்னைப் படம் எடுப்பதைப் பார்த்த பெண் ஊழியர் அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார்.
சத்தம் கேட்டதும் அங்கிருந்து தப்பியோடிய ராஜராஜேஸ்வரன், எதுவும் நடக்காதது போல அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக பெண் ஊழியர்களிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார் அந்த பெண் ஊழியர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர், மின் கோட்டச் செயற்பொறியாளர் ஜெயலெட்சுமியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர், மின் வாரிய ஊழியர் ராஜராஜேஸ்வரனின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களின் பல ஆபாசப் படங்கள் அதில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மதுரை செல்லூர் அருண்தாஸ்புரத்தைச் சேர்ந்த, மின் வாரிய வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜராஜேஸ்வரனை (33) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரன், மற்ற பெண் ஊழியர்களையும் இதுபோல் படம் எடுத்துள்ளாரா என்பது குறித்தும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.