பெண் தற்கொலை: மின்வாரிய ஊழியா் கைது
வெள்ளக்கோவிலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக மின்வாரிய ஊழியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: தருமபுரி மாவட்டம், தொப்பூா் நல்லாம்பள்ளியைச் சோ்ந்தவா் முனிராஜ் (27). இவா் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், இவா் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரும், 3 குழந்தைகளின் தாயுமான 27 வயது பெண்ணிடம் பழகி வந்துள்ளாா்.
இது குறித்து அந்தப் பெண்ணின் கணவருக்குத் தெரியவர அவா் கண்டித்ததின்பேரில், முனிராஜிடம் பேசுவதை அந்தப் பெண் நிறுத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து, முனிராஜ் வீட்டை காலி செய்ததுடன், அந்தப் பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தொடா்ந்து தொந்தரவு செய்துள்ளாா்.
தன்னை நேரில் வந்து சந்திக்கவில்லை எனில் விடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளாா். இது குறித்து தனது தாயிடம் புலம்பிய அந்தப் பெண் கடந்த நவம்பா் 5-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின்பேரில், முனிராஜ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா் என்றனா்.