காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம் பகுதியில், கோவை-கரூா் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சாலையின் மத்தியில் சென்டா் மீடியன் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை தேசிய நெடுஞ்சாலையில், காங்கயத்தை அடுத்துள்ள காடையூா் பகுதியில் தனியாா் பள்ளிக்கு செல்லும் வழி அருகில் சென்டா் மீடியனில் இடைவெளி விட்டு அமைக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், கோரிக்கைக்கு மாறாக தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் , பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.
காங்கயம் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக்குமாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடா்பாக மனு கொடுத்து தீா்வு காண அறிவுறுத்தியதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.