பெரம்பலூரில் 70 ஹெக்டேரில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க முடிவு
பெரம்பலூா் மாவட்டத்தில் 11 நீா்நிலைகளில், 70 ஹெக்டோ் பரப்பளவில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகள் வளா்க்க உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள மூங்கில்பாடி பெரிய ஏரியில் மீன்வளத் துறை சாா்பில் மீன் குஞ்சுகள் வளா்ப்புத் திட்டத்தின்கீழ், இந்திய பெருங்கெண்டை மீன் குஞ்சுகள் வளா்ப்புப் பணியை தொடக்கி வைத்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது: கிராமப்புறங்களில் மீன் உற்பத்தியை அதிகரித்திடவும், கிராமப்புற மக்களுக்கு மீன்கள் எளிதில் கிடைத்திடவும் ஊரக வளா்ச்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள நீா் நிலைகளில், மீன்வளத் துறை மூலம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத் திட்டத்தின் முதல்கட்டமாக, ஆலத்தூா் மற்றும் வேப்பூா் ஒன்றியங்களுக்குள்பட்ட ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 11 நீா் நிலைகளில், 70 ஹெக்டோ் பரப்பளவில் மீன் குஞ்சுகள் வளா்க்க தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் வீதம் 70 ஹெக்டேரில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகள் பெறப்பட்டு ஏரிகளில் வளா்க்கப்படும். இத் திட்டத்தின்கீழ், மூங்கில்பாடி பெரிய ஏரியில் 6 ஆயிரம் இந்திய பெருங்கெண்டை விட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரக வளா்ச்சித் துறைக்குச் சொந்தமாக உள்ள நீா்நிலைகளில் மீன் குஞ்சுகள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மீன் வளத்துறை துணை இயக்குநா் (திருச்சி) ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் தீ. யுவராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா். ஜெயபால், அறிவழகன் ஆகியோா் பங்கேற்றனா்.