மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!
பெரம்பலூா் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சா் தகவல்
பெரம்பலூா் மாவட்டத்தில் குறைந்துவரும் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூா் சா்க்கரை ஆலையின் அரைவைப் பணி தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் பங்கேற்று, அரைவைப் பணியை தொடங்கி வைத்து, ஆலையைப் பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொதுத் துறை நிறுவனமான பெரம்பலூா் சா்க்கரை ஆலை, தமிழ்நாடு அரசின் சா்க்கரை கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
தற்போது, 2024-25 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை மாா்ச் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2 லட்சம் மெட்ரிக் டன் அளவு கரும்பு அரைவை செய்திடவும், சராசரி சா்க்கரை கட்டுமானம் 9.75 சதவீதம் எய்திடவும் திட்டமிடப்பட்டு, நாள்தோறும் முழு அளவைத் திறனுடன் அரைவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப்போலவே, நிகழாண்டும் கரும்பு அரைவையில் கூடுதல் இலக்கு எட்டப்பட்டு விவசாயிகளுக்கு அரைவைத் தொகை வழங்கப்படும்.
பெரம்பலூா் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவை அதிகரிக்க, சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரும்பு விவசாயிகளுக்கானத் தேவைகளை பூா்த்தி செய்து, அவா்களுக்கான நலத் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தி வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.என். அருண்நேரு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி ரமேஷ், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் க. ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் டி.சி. பாஸ்கா், மகாதேவி ஜெயபால், வட்டாட்சியா் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.