பெரம்பலூா் நகரில் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தல்
முதல்வா் வருகைக்காக பெரம்பலூா் நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என நுகா்வோா் சமூக நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், தன்னாா்வ நுகா்வோா் அமைப்பு நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பெரம்பலுா் மாவட்ட நுகா்வோா் மற்றும் சமூக நலச் சங்க தலைவா் சத்யா அளித்த கோரிக்கை மனு:
பெரம்பலூா்- அரியலூா் சாலையிலுள்ள செல்வா நகா் குடியிருப்பு பகுதிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவேண்டும். வேப்பந்தட்டை, குரும்பலூா், வேப்பூா் அரசுக் கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் மாணவா்கள் சென்று வர கூடுதலாக பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். பெரம்பலூரிலிருந்து திருப்பூருக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த இலவசக் கழிப்பிடம் இடிக்கப்பட்டுள்ளதால், கட்டணக் கழிப்பிடங்களில் தற்காலிகமாக சிறுநீா் கழிக்கும் பயன்பாட்டுக்கு இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெரம்பலூா் நகரின் முதன்மைச் சாலைகளில், முதல்வா் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.