நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் நிலத்தகராறில் 45 வயது விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தி மாவட்டம் வண்டியா குருட் எனும் கிராமத்தைச் சேர்ந்த அஹில்கர் (வயது-45) எனும் விவசாயி, நேற்று இரவு அவரது மகனுக்கு உணவுக் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த கிராமவாசிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தொடர் வாக்குவாதம் கைக்கலப்பானதுடன் அவர்கள் கட்டைகளைக் கொண்டு அஹில்கரைத் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
இதையும் படிக்க: துப்பாக்கி சூட்டில் 8 வயது சிறுமி படுகாயம்!
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை ஃபரித்பூரிலுள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர், அவரை அவரது குடும்பத்தினர் பரேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி பலியனார்.
இதுகுறித்து, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரின் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பழைய நிலப் பிரச்சனையினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.