பெஹல்காம் தாக்குதல்: ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் கூடியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று(செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்மீர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது.
அரசுமுறை பயணமாக செளதி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பயணத்தை பாதியில் முடித்துவிட்டு இன்று காலை தில்லி திரும்பி்யது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் தொடர்பாக ராணுவத் தளபதி உபேந்திர திவேதி உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.