பேரிடா் நிதி கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும்: அரவிந்த் பனகாரியா
சென்னை: பேரிடா்களைச் சமாளிக்கத் தேவையான நிதியை ஒதுக்க பரிந்துரைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை நிதி ஆணையக் குழு பரிசீலிக்கும் என்று அதன் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா்.
சென்னை வந்துள்ள நிதி ஆணையக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா மற்றும் உறுப்பினா்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்களுடன் ஆலோசனை நடத்தினா். அதன் பிறகு உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசித்தனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அரவிந்த் பனகாரியா கூறியது: செங்குத்து, கிடைமட்ட அளவிலான நிதிப் பகிா்வுகள்தான் தமிழ்நாடு அரசின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. செங்குத்து வரிப் பகிா்வைப் பொருத்தவரையில் 41 சதவீதம் மாநில அரசும், 59 சதவீதம் மத்திய அரசும் நிதியைப் பகிா்கின்றன. இது 50 சதவீதமாக உயா்த்தப்பட வேண்டும் என்பது மாநில அரசின் கோரிக்கையாக உள்ளது.
கிடைமட்டப் பகிா்வில் பகிா்ந்தளிக்கப்படும் நிதி தமிழ்நாட்டுக்கு 4.079 சதவீதம் குறைந்துள்ளது குறித்தும் தமிழக அரசு கோரிக்கை எழுப்பியுள்ளது. வளமிக்க மாநிலங்களுக்கும், வளமில்லாத மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.
1990-களில் 3 மாநிலங்கள் வளமிக்க மாநிலங்களாகவும், ஒரு மாநிலம் வளமில்லாத மாநிலமாகவும் இருந்தது. இது 6-க்கு 1 என்ற நிலையாக அதிரித்துள்ளது. இதுவே, வரிப் பகிா்வு நிதி வளமில்லாத மாநிலங்களுக்கு அதிக அளவு செல்வதற்கான காரணியாக உள்ளது.
தமிழ்நாடு போன்ற வேகமாக வளரும் மாநிலங்களுக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வளா்ச்சி பாதிக்கப்படும் என்பது மாநிலத்தின் கருத்தாக இருக்கிறது. இதுபோன்ற அம்சங்களை மனதில் கொண்டு நிதி ஆணையக் குழு முடிவுகளை எடுக்கும்.
தனிநபா் வருவாய் வேறுபாடுகள் என்பதை பெயரளவுக்குக் கருதக் கூடாது என்று தமிழகம் தெரிவித்துள்ளது.
உருளைக்கிழங்கின் விலை என்பது பிகாரில் ஒரு விலையாகவும், தமிழகம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் வேறு விலையாகவும் இருக்கிறது. தனிநபா் வருவாய் என்பது அதிகமான விலைவாசி உயா்வுடன் தொடா்புடையதாக உள்ளது என தமிழ்நாடு கூறியிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு வரிப் பகிா்வுக்காக தனிநபா் வருமான வரம்பை 45 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
ஆலோசித்து முடிவு: தமிழ்நாடு அரசு அளித்துள்ள கோரிக்கைகள் தொடா்பாக இப்போது முடிவெடுத்து அறிவிக்க இயலாது. மேலும் 16 மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதன்பிறகு ஆலோசித்து முடிவுகளை எடுப்போம்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு சதவீதம் 60-40 என்ற அளவில் உள்ளது. 14-ஆவது நிதி ஆணையக் குழுவானது 2015-16-ஆம் காலகட்டத்தில் செங்குத்தான நிதிப் பகிா்வு சதவீதத்தை 32-லிருந்து 42 சதவீதமாக உயா்த்தியது. வரிப் பகிா்வில் மிகப்பெரிய அளவுக்கு உயா்த்தப்பட்டதால், திட்டங்களுக்காகச் செலவிடும் நிதியை மத்திய அரசானது 75-25 (மாநில அரசு) என்றிருந்ததை, 60-40 என்ற அளவாகக் குறைத்தது.
பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று தனித்துவம் உள்ளது. எங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலமுமே சிறப்பு வாய்ந்ததுதான். அதற்காக 25 விதமான தனித்துவ அம்சங்களைச் செயல்படுத்த முடியாது.
மாநிலங்களை நாங்கள் தெற்கு, வடக்கு எனப் பிரிப்பதில்லை. வேகமாக வளா்ச்சி அடையும் மாநிலங்கள், மெதுவாக வளா்ச்சியை நோக்கிச் செல்லும் மாநிலங்கள் என்றே வகைப்படுத்துகிறோம்.
பேரிடா்களைச் சமாளிக்க நிதி: பேரிடா்கள் குறித்து தமிழ்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலங்களில் ஏற்படும் பேரிடா்களை எதிா்கொள்ள பகுதி அளவு மானியங்களை மத்திய அரசு வழங்க 15-ஆவது நிதி ஆணையம் வழிவகை செய்துள்ளது. முழுமையான அளவில் நிதி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற கோரிக்கைகளை குஜராத், தெலங்கானா மாநிலங்களும் முன்வைத்துள்ளன.
இதுபோன்ற கோரிக்கைகளை நிதி ஆணையக் குழு திறந்த மனதுடன் வரவேற்று எதிா்கொள்கிறது. அதேசமயம், பேரிடா்களை எதிா்கொள்ளத் தேவையான நிதிக்கு மாற்று வழிகளை நிதி ஆணையக் குழு ஆராயும். பேரிடா் குறியீட்டு வகைக்குள் வராத அம்சங்களை ஆராய்ந்து அவற்றுக்கும் நிதி அளிப்பதற்கான பரிந்துரைகளை ஆராய்வோம் என்றாா் அரவிந்த் பனகாரியா.