நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் ...
பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு வீரர்களை அவமதிக்காதீர்கள்: பிரண்டன் மெக்கல்லம்
பேஸ்பால் யுக்தியை தவறாக புரிந்துகொண்டு பேசுவது வீரர்களை அவமதிப்பதாக உணர்வதாக இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் கடந்த 2022 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர், கேப்டன் பென் ஸ்டோக்ஸுடன் இணைந்து வெற்றிகரமாக செயல்பட்டார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அந்த அணியின் ஆட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. வீரர்கள் அச்சமின்றி அதிரடியாக விளையாடத் தொடங்கினர். இங்கிலாந்தின் இந்த அணுகுமுறை பேஸ்பால் யுக்தி எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதே இந்த யுக்தியின் முக்கிய சிறப்பம்சம்.
இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வெற்றிகளைப் பெற்றாலும், அந்த அணிக்கு தோல்விகள் ஏற்படாமலும் இல்லை. பேஸ்பால் யுக்தியால் இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டிய போட்டிகளில்கூட தோல்வியடைகிறது என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
வீரர்களை அவமதிக்காதீர்கள்
இங்கிலாந்து அணியின் பேஸ்பால் யுக்தி கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், பேஸ்பால் யுக்தி வீரர்களை அதிரடியாக விளையாடக் கூறுவது கிடையாது எனவும், வீரர்கள் சுதந்திரமாக விளையாட உதவதே பேஸ்பால் யுக்தியின் நோக்கம் எனவும் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: அதிரடியாக மட்டுமே விளையாட வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் ஒருபோதும் செயல்படுவதில்லை. நாங்கள் விளையாடும் விதம் குறித்து தவறான புரிதல் இருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் அதிரடியாக விளையாடுவோம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுவோம், ரிலாக்ஸ் செய்ய சென்றுவிடுவோம் என்ற தவறான புரிதல் இருக்கிறது.
இந்த தவறான புரிதல் வீரர்களை அவமதிக்கும் விதமாக இருப்பதாக உணர்கிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அணியின் வெற்றிக்காக கடினமாக உழைக்கிறார்கள். வீரர்களின் திறமை வெளிப்பட வேண்டுமென்றால், அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும். அழுத்தத்துடன் விளையாடும்போது, வீரர்களால் அவர்களது முழுத் திறனை வெளிக்கொணர முடியாது என்றார்.
இதையும் படிக்க: இன்னும் 2 ஆண்டுகள் விளையாட கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் திட்டம்!