பைக் மோதியதில் மூதாட்டி பலி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் செவல்பட்டித் தெருவைச் சோ்ந்தவா் கோமதி (60). இவா் மதுரை சாலையில் இட்லிக் கடை நடத்தி வந்தாா். இவா் கடைக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை சாலையைக் கடந்தாா்.
அப்போது, ராஜபாளையம் பெத்தையா பிள்ளைத் தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் (20) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கோமதியை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா், அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.