இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
பொங்கல்: 'எங்க ஊரு கரும்பு ருசியே தனி ரகம் தான்!' - ரகசியம் சொல்லும் விருதுநகர் விவசாயிகள்
பொங்கல் பண்டிகை என்றதும் பொங்கல் சுவையோடு சேர்த்து கரும்பின் தித்திப்பும் நாக்கில் சட்டென வந்து போகும்.
அதுவும் சில ஊர்களில் விளையும் கரும்புகளின் சுவை தனி ரகம். அப்படியான ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் இருக்கும் புலியூரான் கிராமத்து கரும்புகளும்.
புலியூரான் ஊரில் உள்ள கரும்பு விவசாயிகளான ஆறுமுகம் மற்றும் பாண்டியிடம் கரும்பு விவசாயத்தை பற்றி பேசினோம்...
"ஒவ்வொரு வருச பொங்கலுக்கும் எங்க ஊர்ல குறைந்தபட்சம் 10 ஆயிரத்துல இருந்து 15 ஆயிர கரும்பு கட்டுகள் வரை அறுவடை செய்வோம். இங்க இருக்க வட்டாரத்துலயே எங்க ஊரு கரும்புக்கு தனி மவுசு. அதுக்கு காரணம், எங்க ஊர் மண் தான்.
பொங்கல் கரும்புக்கு மாசி மாசமே விதை போட்ருவோம். அது முழங்கால் அளவுக்கு வளர்ந்ததும், களையடுத்து தோகையறிஞ்சுடுவோம். அந்த நேரத்துல மாட்டு சாணத்தை உரமா போடுவோம்.
கரும்பு முழுசா வளர 10 மாசம் பிடிக்கும். மாசி மாசம் விதைச்ச கரும்பு சரியா பொங்கலுக்கு வளர்ந்துரும். கரும்புலயும் பல வகை இருக்கு. நாங்க ரஸ்தாளி, நாடுனு ரெண்டு வகை கரும்பு போட்ருக்கோம்.
பொங்கலுக்கு வளர்ந்த கரும்பை அறுவடை செஞ்சதும், மண்ணுக்கு அடில இருக்க கரும்புக்கு தண்ணீ விடுவோம். அப்படி வளர்ந்து வர கரும்பை சாறு கரும்புனு சொல்லுவோம். அந்தக் கரும்பை தான் கரும்பு ஜூஸுக்கு பயன்படுத்துவாங்க.
கரும்பு கட்டுனு முன்னாடி சொன்னோம்ல ஒரு கரும்பு கட்டுல 10-ல இருந்து 15 கரும்பு வரைக்கும் இருக்கும். ஒரு கட்டு கரும்பு ரூ.500-ல இருந்து 700 வரைக்கும் போகும். இதுல விதை செலவு மட்டுமில்ல...அறுவடைக்கு வந்த ஆள் கூலி, வண்டி வாடகை, பெட்ரோல் செலவு - இத்தனையும் கழிச்சதுப்போகத் தான் லாபம். இருந்தாலும் பொங்கல் சமயத்துல நல்ல லாபம் கிடைக்கும் தான்.
மார்க்கெட்டுக்கு போய் விக்கறதை தாண்டி, சில பேர் தோட்டத்துக்கே நேரடியா வந்து வாங்கிட்டு போவாங்க. அவங்களுக்கு மார்க்கெட்டுக்கு கரும்பு ஏத்திட்டு போய் விக்கற விலையை விட, கம்மி தான். ஏன்னா, நியாயமான லாபமே எங்களுக்கு போதும்" என்று புன்னகையுடன் பேசி முடிக்கிறார்.