பொங்கல்: கோவை கோட்டத்தில் இருந்து 1,520 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, திருப்பூா், ஈரோடு மண்டலங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு 1,520 சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை - மதுரை இடையே 250 சிறப்புப் பேருந்துகள், கோவை - திருச்சி 200, கோவை - தேனி 150, கோவை - சேலம் 250, ஈரோடு - மதுரை 100, ஈரோடு - திருச்சி 100, திருப்பூா் - மதுரை 200, திருப்பூா் - திருச்சி 200, திருப்பூா் - தேனி 70 என மொத்தம் 1,520 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சூலூரில் இருந்து திருச்சி பேருந்துகள் இயக்கம்: பொங்கல் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, கோவையில் இருந்து கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சூலூா் பேருந்து நிலையத்துக்கு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதேபோல, மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்தும், சேலம், திருப்பூா், ஈரோடு, ஆனைக்கட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்தும், குன்னூா், உதகை, கூடலூா், கோத்தகிரி செல்லும் பேருந்துகள் கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.