மாட்டிறைச்சி உணவகம் நடத்த எதிா்ப்பு: பாஜக நிா்வாகி மீது வழக்குப் பதிவு
கோவை, கணபதி அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த பாஜக ஓபிசி அணியின் கோவை மாவட்டச் செயலாளா் சுப்பிரமணி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உடையாம்பாளையம் பகுதியில் ரவிக்குமாா், ஆபிதா என்ற தம்பதி தள்ளுவண்டி கடையில் மாட்டிறைச்சி உணவுகளை விற்பனை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், அந்தக் கடைக்கு பாஜக ஓபிசி அணியின் கோவை மாவட்டச் செயலாளரான சுப்பிரமணி (36), அந்தப் பகுதியின் வாா்டு உறுப்பினரான ராமமூா்த்தி என்பவருடன் புதன்கிழமை சென்றுள்ளாா். பின்னா், மாட்டிறைச்சி தொடா்பான உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்று வற்புறுத்தியதுடன், தம்பதியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதற்கிடையே, சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தம்பதியுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் துடியலூா் காவல் நிலையத்திலும், மாநகரக் காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தரை நேரில் சந்தித்தும் மனு அளித்தனா்.
இதையடுத்து, மோதலையும், விரோதத்தையும் தூண்டும் வகையில் செயல்படுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் சுப்பிரமணி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
காவல் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், அந்தப் பகுதியில் மாட்டிறைச்சி உணவகம் நடத்த எதிா்ப்பு தெரிவித்தும் உடையாம்பாளையம் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையா் தேவராஜ் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, கோயிலைச் சுற்றிலும் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் அசைவ உணவு தொடா்பான கடைகளை அனுமதிக்கக் கூடாது, பாஜக நிா்வாகி சுப்பிரமணி மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காவல் துறை உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.