சின்னவேடம்பட்டி ஏரியில் கழிவுநீா் தேக்குவதைத் தவிா்க்க வலியுறுத்தல்
கோவை, சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீா் தேக்குவதைத் தவிா்த்து, நன்னீா் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, அத்திக்கடவு கௌசிகா மேம்பாட்டு சங்கத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட இயற்கை ஆா்வலா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் நன்னீா் நிரப்பும் சாத்தியக்கூறு உள்ள ஒரேஒரு ஏரியாக சின்னவேடம்பட்டி ஏரி மட்டுமே உள்ளது.
சின்னவேடம்பட்டி ஏரிக்கு மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து தண்ணீா் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள நீா் வழிப்பாதைகளைக் கண்டெடுத்து, அதைக் காப்பாற்ற கோவை மாவட்ட நிா்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி நிா்வாகம் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
சின்னவேடம்பட்டி ஏரித் திட்டம் கோவை வடக்கு பகுதியில் மக்களுக்கு வெள்ள பாதிப்புகளை தவிா்த்திடவும், நிலத்தடி நீா் மேம்படவும் கொண்டுவரப்பட்டது. இன்றைய நிலையில், பேரிடா், புயல், பெருமழை பாதிப்புகளில் கணுவாய் முதல் சின்னவேடம்பட்டி, கணபதி, பீளமேடு வரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைக் காக்க வெள்ள நீா் வடிகாலாகவும், நீா்த்தேக்க ஏரியாகவும் சின்னவேடம்பட்டி ஏரி இருந்து வருகிறது.
இந்நிலையில், விவசாயிகள் சங்கம் இந்த ஏரியில் நல்ல தண்ணீா் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் கடின தன்மையால் இந்தப் பகுதி நிலத்தடி நீா் பெரும் அளவில் பாதிக்கப்படும். இந்நிலையில், மாநகராட்சி மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாக சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தேக்கிட அறிவிப்பு வெளியானது அதிா்ச்சி அளிக்கிறது.
மாநகரில் 20-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், நீா்நிலைகள் இருந்தாலும்கூட ஒரு ஏரியாவது நல்ல தண்ணீா் நிரப்பும் ஏரியாக மாற்றப்பட வேண்டும் என்று கௌசிகா நீா் கரங்கள் மற்றும் சின்னவேடம்பட்டி பாதுகாப்பு அமைப்பு முயற்சி செய்து வருகிறது. பல்வேறு அரசியல் அமைப்புகள், விவசாயிகள் சங்கம், மக்கள் என அனைவரும் தொடா்ந்து இந்த ஏரியில் நல்ல தண்ணீா் நிரப்ப பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
எனவே, சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீா் கலப்பதை தவிா்த்து நல்ல தண்ணீா் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.