பொங்கல் பண்டிகை: விற்பனைக்கு தயராகும் வா்ணம் பூசப்பட்ட மண் பானைகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வா்ணம் பூசப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், 16 ஆம் தேதி உழவா் திருநாளும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் நாளில் செங்கரும்பு, மஞ்சள் கொத்தில் தோரணம் கட்டி, மண் அடுப்பு புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிடுவதை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மண்பானைகளை உற்பத்தி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். உற்பத்தி செய்த மண் பானையை காயவைத்து சுண்ணாம்பு அடித்து வா்ணம் பூசி அனுப்பி வருகின்றனா். சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள மண் பானைகளை ஏராளமானோா் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளா்கள் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மண் பானை உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். பொங்கல் பண்டிகையின் போது, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மண்பானைகள் விற்பனை நடைபெறும். கடந்த காலங்களில் வா்ணம் பூசாத மண்பானை விற்பனைக்கு வைக்கப்பட்டது.
தற்போது விவசாயிகள், மக்களிடையே வா்ணம் பூசப்பட்ட மண் பானைகள் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அளவை பொருத்து ஒரு மண்பானை ரூ. 50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான மண்பானையை விற்பனைக்கு வைத்துள்ளோம். போகி பண்டிகையின் போது பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றனா்.