காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்
பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊா்களில் கொண்டாடிவிட்டு, சென்னைக்கு மீண்டும் திரும்பும் மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சனிக்கிழமை வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு ஜன. 10-ஆம் தேதி இரவு முதலே புறப்படத் தொடங்கினா்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியூா்களுக்குப் புறப்பட்டுச் சென்றவா்களின் எண்ணிக்கை ஜன.11,12,13 ஆகிய தேதிகளில் அதிகளவில் காணப்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. ஜன.11 முதல் 15-ஆம் தேதி வரை காா், பேருந்து, வேன் என சுமாா் 1.56 லட்சம் வாகனங்கள் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்து சென்றன.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பொதுமக்கள் மீண்டும் திரும்பத் தொடங்கினா்.
அதன்படி, ஜன.15,16 ஆகிய தேதிகளில் தலா 36 ஆயிரம் வாகனங்கள் சென்னை நோக்கிச் சென்றன. வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டதால், சென்னை நோக்கிச் செல்லும் வழித்தடத்தின் 7 பாதைகளும் திறந்து விடப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மட்டும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை சுமாா் 39 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்னை நோக்கிச் சென்றன. சனிக்கிழமையும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.
சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி சுமாா் 34,500 வாகனங்கள் சென்னை நோக்கிச் சென்ாக விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்து சென்றன.
பேருந்து, ரயில்களில் கூட்டம்: சொந்தமான காா் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தவா்கள் தங்கள் வாகனங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களை நோக்கிச் சென்ற நிலையில், பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்னைக்கு பயணம் செய்பவா்களின் எண்ணிக்கையும் வெள்ளி, சனிக்கிழமைகளில் அதிகமாகவே காணப்பட்டது.
வழக்கத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான சிறப்புப் பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கம், மாதவரம், அடையாறு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.