பொதுமக்களின் மனுக்களை அலுவலா்கள் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது தவறு: உயா்நீதிமன்றம்
பொது மக்கள் வழங்கும் மனுக்களை அரசு அலுவலா்கள் பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது கடமை தவறும் செயல் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமத்தைச் சோ்ந்த பி.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், எமனேஸ்வரத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய்ப் பகுதியில் தனி நபா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டாக்களை ரத்து செய்து, கண்மாய்ப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா், பரமக்குடி கோட்டாட்சியா், வட்டாட்சியருக்கு அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நான் அளிக்க மனுக்களின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: அரசு புறம்போக்கு கண்மாயில் தனி நபா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரா் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளாா்.
பொதுமக்கள் மனுக்கள் அளிக்கும் போது, அந்த மனுக்களை காலவரம்பின்றி நிலுவையில் வைக்காமல், மனுக்களின் முக்கியத்துவம் கருதி விரைந்து பரிசீலனை செய்து, சட்டப்படி உரிய உத்தரவிட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.
அதிகாரிகள் மனுக்களை பரிசீலிக்காமல் காலம் தாழ்த்துவது கடமை தவறும் செயலாகும். எனவே, மனுதாரா் அளித்த மனுவை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து, 3 மாதங்களில் சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.